

தமிழகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை யில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, பெங்களூர், ஐதராபாத் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு தினமும் சுமார் 800 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரயில்கள், சிறப்பு ரயில்கள், அரசுப் பேருந்துகள் எதிலும் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு கடைசி புகலிடம் ஆம்னி பஸ்கள்தான் என்பதால் கட்டணமும் பல மடங்கு அதிகரிக்கும்.
இந்நிலையில், டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏசி ஆம்னி பஸ்களுக்கு 30 சதவீத மும், சொகுசு ஆம்னி பஸ் களுக்கு 20 சதவீதமும் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து கேட்டதற்கு, போக்குவரத்து ஆணையரக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
ஆம்னி பஸ்கள் தற்போதே கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். தீபாவளி சீசனை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க 13 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆர்டீஓ, 2 வாகன ஆய்வாளர்கள் இருப்பார்கள். மொத்தம் 40 போக்குவரத்து அலுவலர்கள் இக்குழுவில் இடம்பெறுவார்கள்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம், ஈசிஆர், ஓஎம்ஆர், பெருங்களத்தூர் அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் பல்வேறு சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்யும். வேறு சில இடங்களையும் தேர்வு செய்து வருகிறோம். இதற்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது, வாகன தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். வழக்கத்தைவிட பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதா என்று பயணிகளிடமும் கேட்கப்படும். பயணிகளின் புகார்கள் உறுதி செய்யப்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருந்தாலும் ஆம்னி பஸ்களின் பர்மிட்டுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஆய்வு வரும் 17-ம் தேதி தொடங்கி, அடுத்த ஒரு வாரம் நடக்கும். காலை, மாலை நேரங்களில் ஷிப்ட் முறையில் அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதுபற்றி தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தின் தலைவர் டி.சடகோபன் கூறும் போது, ‘‘ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை விவகாரத்தில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை. தற்போது பலரும் ஆம்னி பஸ்களில் செல்கின் றனர். இதற்காக தனி ஆணையம் அமைத்து ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயித்து கண்காணிக் கலாம்.
ஆம்னி பஸ்களுக்கு கட்டணமே நிர்ணயிக்கப்படாத நிலையில், அதிக கட்டணத்தை எப்படி போக்குவரத்து ஆணையரகம் கணக்கிடுகிறது என்பது புரியவில்லை. முதலில் ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.