

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வைற்ற பட்டதாரிகள் போராட்டம் நடத்தி வருவதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பா.வளர்மதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமுக தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என பார்வையற்றோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 5 நாள்களாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை வேப்பேரி பெரியார் நெடுஞ்சாலையிலும், மறுநாள் அண்ணா சாலை நந்தனம் அருகிலும் வியாழக்கிழமை மெரினா கண்ணகி சிலை அருகே காமராஜர் சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த போலீசார் அனைவரையும் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர். இவர்களின் போராட்டத்தால் நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கிடையே சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த பார்வையற்ற பட்டதாரிகள் 9 பேரை திருவல்லிக்கேணி போலீசார் வியாழக்கிழமை அப்புறப்படுத்தி, மதுராந்தகம் அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த செயலை கண்டித்து பார்வையற்ற பட்டதாரிகள் வெள்ளிக்கிழமை கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் சமூகநலத் துறை அமைச்சருடன் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அவர்களது கோரிக்கை நிறைவேற உறுதி அளிக்கப்படவில்லை என்றும், அதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.