

தேசிய கல்விக் கொள்கையை தயாரிக்க உயர்மட்டக் குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசியக் கல்விக் கொள்கை 2016-ஐ தயாரித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காகப் பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு 217 பக்க அறிக்கையை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அக்குழுவின் முழுமையான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
மாறாக அதன் சில உள்ளீடுகள் அடங்கிய 43 பக்க அளாவிலான ஒரு குறுகிய அறிக்கையை மட்டுமே மத்திய அரசு மக்கள் பார்வைக்கும், கருத்துக்கும் வெளியிட்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி வழங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாகும். இதனைக் கவனத்தில் கொண்டு கல்விக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மாநில அரசுப்பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சமூக நல விஞ்ஞானிகள் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவை உடனே அமைக்க வேண்டும். அக்குழுவின் ஒத்த கருத்துக்கேற்ப தேசியக் கல்விக்கொள்கை 2016 தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.
கல்விக் கொள்கை தான் தேசத்தின் உயிர்மூச்சு, உயிர்நாடி. அதன் முதன்மையான முக்கியத்துவத்தை உணர்ந்து தேசியக் கல்விக் கொள்கை 2016 தயாரிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாக, இலகுவாக கிடைத்து அவர்கள் முன்னேற்றம் அடைந்து, நாடும் வளம் பெற வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.