

கான்பூரில் இன்று துவங்கி 5 நாட்கள் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், அடுத்தாண்டு நடை பெறும் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் வருடாந்திர கூட்டம் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் இன்று தொடங்குகிறது.
கான்பூர் அடுத்த, பிதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இன்று முதல் 5 நாட்களுக்கு கூட்டம் நடைபெறும். 13-ம் தேதி வரையிலான முதல் 3 நாட்களில் சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
அடுத்த இரண்டு நாட்களில், ஆர்எஸ்எஸ் உடன் சம்பந்தப்பட்ட விஷ்வ இந்து பரிஷத், பாரதிய மஸ்தூர் சங் உள்ளிட்ட 40 அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவர்களுடன் ஆர்எஸ்எஸ் மாநில நிர்வாகிகளும் இணைந்து முக்கிய விவகாரங்களை விவாதித்து முடிவெடுப்பார்கள்.
நான்கு மாநில தேர்தல்கள் நடைபெற உள்ளதால், பாஜகவை வெற்றி பெறச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி மற்றும் 41 மாநில நிர்வாகிகள் நேற்றைய தினமே கான்பூர் வந்து சேர்ந்துவிட்டனர். தலைவர்களுக்குள் அதிகாரப் பூர்வமற்ற சந்திப்புகளும், கூட்டங் களும் நடைபெற்றன.
பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள் ராம்லால் மற்றும் ராம்மாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.