

வெளிநாட்டு பட்டாசுகளை விற்பது சட்டவிரோதமானது. அதுபோன்ற பட்டாசுகள் விற்கப்படுவது தெரியவந்தால், உடனடியாக போலீஸுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அயல்நாட்டு வர்த்தக பொது இயக்குநர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், போலியான பெயரிடப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற தகவல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. அந்த பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளான பொட்டாட்சியம் குளோரைடு, தீங்கு விளைவிக்கக் கூடியதும் உடனே தீப்பிடித்து வெடிக்கும் தன்மை கொண்டது எனவும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், சட்டத்துக்குப் புறம்பாக நம் நாட்டுக்குள் அதிகமான அளவுகளில் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும், அவற்றை தீபாவளி நாட்களில் சில்லறை வர்த்தகத்தில் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் அமோர்சஸ் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
குளோரைடு மற்றும் அதனுடன் சேர்ந்த சல்பர் அல்லது சல்பருடன் சேர்ந்த மற்ற வேதிப்பொருட்கள், இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் நம் நாட்டில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பட்டாசுகளை இறக்குமதி செய்ய இதுவரை எந்த உரிமமும் வழங்கப்படவில்லை.
சட்டத்துக்குப் புறம்பாக மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைப்பதும், விற்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படிப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைத்துள்ள இடங்களையும் விற்பனை மையங்களையும் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.