

அஞ்சல் துறை ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி, அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஏறத்தாழ 1.50 லட்சம் அஞ்சல் அலுவலகங்களுடன் உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறையாகத் திகழும், இந்திய அஞ்சல் துறையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அஞ்சல் சேவை மட்டுமின்றி, சிறிய அளவிலான வங்கிச் சேவையிலும் அஞ்சல் துறை ஈடுபட்டுள்ளது.
அஞ்சல் தலைகள், அட்டை, கடித உறைகள் விற்பனை, பதிவு அஞ்சல் அனுப்புதல், பணம் மற்றும் பொருட்கள் அனுப்புதல், உள்நாடு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை, விரைவு அஞ்சல் சேவை, இ-போஸ்ட், இணைய வழியில் பில் தொகை செலுத்துதல் உட்பட எண்ணற்ற பணிகளுடன், அனைத்துத் தரப்பினருக்குமான சேமிப்புத் திட்டங்கள், கங்கா தீர்த்தம், தங்க நாணயம் விற்பனை செய்தல், வங்கிச் சேவைகள் உள்ளிட்டவற்றிலும் அஞ்சல் துறை ஈடுபடுகிறது.
அஞ்சல் துறை பணியாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் ஓய்வூதியர்களுக்கு அஞ்சல் அலு வலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு, சம்பளம் வழங் கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அஞ்சல் துறை சார்பில் நாடு முழு வதும் 1,000 ஏடிஎம் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் அஞ்சல் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் மேலும் ஒரு லட்சம் கார்டுகள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் சார்லஸ் லோபா தெரிவித்துள்ளார்..
அஞ்சல் துறையின் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி, அனைத்து வங்கிகளின் ஏடிஎம்-களிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு, ஊழியர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை தலைமை அஞ்சல் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி சுப்பிரமணியம் கூறும்போது, “பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்ட வங்கிகளின் ஏடிஎம்களில், அஞ்சல் துறையின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அஞ்சல் ஊழியர்களுக்கு, குறிப்பாக ஓய்வூதியர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரியும், தேசிய அளவில் அஞ்சல் துறை விருது பெற்றவருமான நா.ஹரிஹரன் கூறும்போது, “அஞ்சல் துறையின் ஏடிஎம் மையங்களில் மட்டுமே அஞ்சல் துறை ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் பணம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. மேலும், பெரும்பாலான அஞ்சல் ஏடிஎம்-கள் பணம் இல்லாமல் மூடப்பட்டிருந்தன. இதனால், அன்றாடச் செலவுக்கும், மருந்து வாங்கவும் பணமின்றி அஞ்சல் ஓய்வூதியர்கள் தவித்தனர். தற்போது அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பால், வீட்டின் அருகிலேயே இருக்கும் ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதனால் லட்சக்கணக்கான அஞ்சல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயனடைவர்” என்றார்.