மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் 19 கி.மீல் இருந்து 28 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் என்றும், கூடுதலாக இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று மத்திய தரை வழி போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது மத்திய தரைவழி போக்குவரத்து இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

சந்திப்பு தொடர்பாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

''தமிழக முதல்வருடனான சந்திப்பின் போது, இனயம் வர்த்தக துறைமுகப் பணிகளை விரைவாக தொடங்க, முழு ஆய்வறிக்கை தயாரிக்க தமிழக அரசு உதவியாக இருக்க வேணடும் என தெரிவித்தோம். முதல்வரும் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக உடனடியாக கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்கரை சாலை பணிகளும் துரிதப்படுத்தப்படும். இதற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை சுற்றுச்சாலை ரூ.5 ஆயிரம் கோடியில் விரிவுபடுத்தப்படுகிறது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் ஏற்கெனவே உள்ள 19 கி.மீ. பறக்கும் சாலை திட்டத்துக்கு பதிலாக 28 கி.மீ. ஆக நீட்டிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மேலும் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது எண்ணூர் துறைமுகத்தில் கப்பல் விபத்து நடந்ததால் எண்ணெய் கசிவு அதனால் ஏற்பட்டுள்ள இழப்பு, இவற்றில் மீனவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றியும் பேசியுள்ளோம்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in