

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்த ஆணையிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுக்கு பாமக இளைஞர் அணித் தலைவரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அன்புமணி கூறியிருப்பதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்களுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) 4.09 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் 51 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மட்டுமே உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மட்டும் ஆன்லைன் முறையில் நிரப்பப்போவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, மீதமுள்ள மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மருத்துவக் கல்வி இயக்குனரகங்களை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவித அறிவுறுத்தலும் தங்களுக்கு வரவில்லை. அதுகுறித்து தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று தமிழக மருத்துக் கல்வி இயக்குநர் விமலா தெரிவித்திருக்கிறார்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்த அறிவிப்பும், வழிகாட்டுதலும் இல்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தரவரிசை அடிப்படையில் தாங்களே நிரப்பிக் கொள்ளப்போவதாக அறிவித்து, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளன. இதனால் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைத் தொடர்பாக தமிழகத்திலுள்ள மாணவர்களிடையே பெருங்குழப்பம் நிலவிவருகிறது.
தனியார் கல்லூரிகள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 100 இடங்களுக்கு 800 பேர் போட்டியிட்டால், அவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ, அவர்களின் விண்ணப்பங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் விண்ணப்பங்களை ஏதோ ஒரு காரணம் கூறி கல்லூரி நிர்வாகம் நிராகரிக்கும் ஆபத்து உள்ளது. மாணவர் சேர்க்கையில் அரசு கண்காணிப்பு இல்லாத பட்சத்தில் அனைத்து விதமான முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கையை அம்மாநில அரசே மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஓர் அணுகுமுறை மற்ற மாநிலங்களில் ஓர் அணுகுமுறை என்பது முறையல்ல. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசுகளே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய சுகாதாரத்துறை ஆணையிட வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்படுவதால், கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து முறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் கடந்த இரு ஆண்டுகளில் ஆண்டு கல்விக் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளன.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிராக இருப்பதால், அதிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். இந்த கல்லூரிகளில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.