

தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக வருவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உறுப்பினர் சேர்க் கையில் மெத்தனம், நேரு குடும்பத்தினர் மீதான விமர்சனம் போன் றவற்றால் ப.சிதம்பரம் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக பி.எஸ்.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. அதற்காக, மக்கள் செல்வாக்குள்ள ஒருவரை புதிய தலைவராக நியமித்து, பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தலைவர் பதவியைப் பெற கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
சமீபத்தில் சத்திய மூர்த்திபவன் வளாகத்தில் நடந்த காமராஜர் மற்றும் சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு விழாவில், தேசிய நிர்வாகிகள் பங்கேற்றபோதும் சிதம்பரம் கோஷ்டியினர் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி வாசன் தரப்பினர் மேலிடத்தில் புகார் செய்துள் ளனர்.
இந்நிலையில், ‘நேரு குடும்பத் தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வரலாம். சோனியாவும், ராகுலும் தொண்டர்களையும் ஊடகங்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டும்’ என்று ப.சிதம்பரம் கூறியது, கட்சி மேலிடத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்ற கோஷ்டியினர் புகார் அனுப்பியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, எப்படியாவது வாசனை அடுத்த தலைவராக கொண்டு வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் கே.விதங்கபாலுவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஆதரவு தெரிவிப் பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:
சோனியா, ராகுல் இருவரும் தொண்டர்களையும் ஊடகங்களை யும் சந்திக்க வேண்டும் என்று சிதம்பரம் கூறுகிறார். ஆனால், கட்சி யில் முக்கிய தலைவராக உள்ள இவரே, பல ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவல கமான சத்தியமூர்த்தி பவனுக்கு வரவில்லை. தொண்டர்களையோ, ஊடகங்களையோ சந்திப்பதில்லை. அவருக்கும் தொண்டர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது.
ஆனால் ஜி.கே.வாசன், தங்க பாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். ஊடகத்தினரையும் அடிக்கடி சந்திக்கின்றனர். இதையெல்லாம் காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித் துள்ளோம்.
கடந்த ஓர் ஆண்டாக தமிழக காங்கிரஸில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கட்சி ரீதியாக உள்ள 59 மாவட்டங்களில், சுமார் 30 மாவட்டங்களில் தலா 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உறுப்பினர்கள் சேர்த்துள்ளனர். ஆனால், சிதம்பரம் அணியினர் இதில் எந்த கவனமும் செலுத்த வில்லை.
டிசம்பர் 31-ம் தேதியுடன் உறுப் பினர் சேர்க்கை முடிந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். பிப்ரவரியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதுகுறித்து விவாதிக்க, டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் 28-ம் தேதி (இன்று) கூட்டம் நடக்கிறது. அப்போது உறுப்பினர் சேர்க்கை மற்றும் கோஷ்டிப் பிரச்சினைகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பட்டியலிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உறுப்பினர் சேர்க்கையில் மெத்தனம், சோனியாவுக்கு எதிரான கருத்து, தமிழக காங்கிரஸின் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளாதது போன்ற காரணங்களால் ப.சிதம்பரம் தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்ப டுகிறது. எனவே, அடுத்த தலைவர் பதவிக்கு ஜி.கே.வாசனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒருவேளை வாசனுக்கு கிடைக்காவிட்டாலும் அவரது ஆதரவு பெற்றவருக்கே மாநிலத் தலைவர் பதவி கிடைக்கும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.