பொன்.ராதாகிருஷ்ணனிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை: மு.க.ஸ்டாலின்

பொன்.ராதாகிருஷ்ணனிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை: மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

மூத்த குடிமக்களை கொச்சைப்படுத்துகின்ற, அவமதிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கருத்தை அவரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை விழா கொண்டாடப்பட்டது. இது குறித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், "திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் நடத்தப்பட்ட வைர விழா அவருக்கு பெருமை சேர்க்கும் விழா அல்ல. அரசியலில் ஓரம் கட்டப்பட்டவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட விழாவாகும். கருணாநிதி துடிப் போடு இருந்திருந்தால் இந்த விழாவையே வேறு மாதிரி நடத்தியிருப்பார். கூடா நட்பு கேடாய் முடியும் என்று யாரை குறிப்பிட்டாரோ அவர்கள் முன்னி லையில் விழா நடத்தியிருக்கின்றனர்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "வைர விழாவை விமர்சித்தது மட்டுமல்ல, 'வயதானவர்களைக் கொண்டு இந்த விழாவை நடத்தி இருக்கிறார்கள்', என்றும் 16 வயது இளைஞரான பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து இருக்கிறார். சீனியர் சிட்டிசன்களை எல்லாம் கொச்சைப்படுத்துகின்ற வகையில், அவமதிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் இந்தக் கருத்தை சொல்லி இருக்கிறார். அவரிடத்தில் இருந்து நான் இப்படிப்பட்ட கருத்துகளை எதிர்பார்க்கவில்லை" என்றார்.

அரசியல் கட்சிகள் தனித்தனியாக செயல்படுகின்றன. அவை ஒன்று சேருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "இன்றைக்கு மத்தியில் இருக்கின்ற ஆட்சியானது மதவாத அடிப்படையில், பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும், மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலான ஆட்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்துகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். கூட்டணி என்பது தேர்தல் வருகின்ற நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in