மெட்ரோ ரயில் பணியால் கீழ்ப்பாக்கம் சாலையில் திடீர் பள்ளம்

மெட்ரோ ரயில் பணியால் கீழ்ப்பாக்கம் சாலையில் திடீர் பள்ளம்
Updated on
2 min read

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணி முடிந்த இடத்தில் நேற்று திடீரென 6 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 36 கி.மீ சுரங்கப்பாதையில் அமைகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடக்கும் சில இடங்களில் இருந்து சிமென்ட் கலவை வெளியேறுவது, சாலையில் பள்ளம் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதுபோன்று சுமார் 30 சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன. குறிப்பாக, அண்ணா மேம்பாலம் அருகே சில நாட்களுக்கு முன்பு 10 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் மாநகர பேருந்து மற்றும் கார் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்பேடு நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில்சேவை விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (ஈவேரா பெரியார் சாலை) கீழ்ப்பாக்கம் சந்திப்பில் ஈகா தியேட்டர் அருகே நேற்று காலையில் திடீரென 6 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த இடத்தின் மேல் பகுதியை தார்ப்பாயால் மூடினர். பின்னர், மெட்ரோ ரயில் பணியாளர்கள், சிமென்ட் கலவையால் பள்ளத்தை மூடி சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள இடத்தில் முதல்முறையாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, “இந்த பகுதியில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பள்ளத்துக்கு மெட்ரோ ரயில் பணி மட்டுமே காரணம் என்று கூற முடியாது. இந்த பகுதியின் கீழே ஏராளமான இணைப்பு குழாய்கள் செல்கின்றன. எனவே, உண்மையான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். மண் வலு இழப்பதால் இப்படி நடந்திருக்கும் என்று நினைக்கிறோம். பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய தேவையில்லை’’ என்றனர்.

சாலையில் ஏற்பட்ட பள்ளம் | படம்: ம.பிரபு

சீரமைப்பு பணிகள் நடைபெற்றபோது..| படம்: ம.பிரபு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in