

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவும் இலங்கையிடம் இந்தியா பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தியா எப்போதும் இலங்கையை நட்பு நாடாகத் தான் கருதுகிறது. அதற்குக் காரணம், அங்கு வாழும் தமிழர்கள் தான். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவும், இந்திய மீனவர்கள் நலனுக்காகவும் இந்தியா பக்குவமாகத் தான் நடந்து கொள்ள வேண்டும்.
கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணி திருவிழாவுக்கு மீனவர்கள் சென்று வர வேண்டும், இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு தீர்வு காண வேண்டும், இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே இலங்கையை அணுக வேடியுள்ளது.
மீனவர்கள் சிறைபிடிக்கப் படுவதைத் தடுக்க, இலங்கை- இந்தியா மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு அனுமதியளிக்க மறுத்ததை அடுத்து அந்த சந்திப்பு டிசம்பர் கடைசிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற மீனவர்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
முன்னதாக, அண்மையில் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கினார். ஏற்காடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் யாரை ஆதரிக்கும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.