

தனது மனசாட்சி சொல்வதை பின்பற்றும் தைரியம் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது என்று கவுதமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவு குறித்து பிரதமர் மோடிக்கு நீண்ட கடிதம் ஒன்று எழுதினார் நடிகை கவுதமி. அக்கடிதம் எழுதியதற்கான காரணம் குறித்து, "தொடக்கத்தில் இருந்தே நான் மக்களில் ஒருவன் என்று கூறிவருகிறார். யார் வேண்டுமானாலும் எனக்கு கடிதம் எழுதலாம், அதற்கு பதில் கொடுப்பேன் என்று ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் பிரதமர்" என்று பதிலளித்திருந்தார்.
ஆனால், பிரதமரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராதா காரணத்தால், "ஜெயலலிதாவின் திடீர் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த முந்தைய கடிதத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை" என்று மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடிப் பேச்சைத் தொடர்ந்து "இதனால் தான் அம்மா ஓபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தார். தனது மனசாட்சி சொல்வதை பின்பற்றும் தைரியம் அவருக்கு இருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கான நீதி. அம்மாவுக்கான நீதி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கவுதமி.
ட்விட்டரில் மோடிக்கு கேள்வி
பல்வேறு ட்வீட்களுக்கு @narendramodi ட்விட்டர் கணக்கிலிருந்து பதில் தெரிவித்து வந்தார்கள். அந்த கணக்கைக் குறிப்பிட்டு, "பிரதமர் நரேந்திரமோடி தனக்கு அனுப்பப்படும் பொதுமக்களின் ட்வீட்டுகளுக்கு பதில் சொல்கிறார். ஏன் அம்மாவுக்கான நீதி வேண்டும் எனும்போது பதிலளிக்கவில்லை. தமிழகத்துக்கான நீதி என்பது அவ்வளவு முக்கியம் இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் கவுதமி.