Published : 22 May 2017 08:48 AM
Last Updated : 22 May 2017 08:48 AM

உதகை மலர் கண்காட்சியில் ஆளுநர் கோப்பையை வென்றது அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை

உதகை மலர் கண்காட்சியில் ஆளுநர் கோப்பையை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தட்டிச் சென்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த 121-வது மலர்க் கண்காட்சி யின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.

வேளாண் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு தலைமை வகித்து பேசியதாவது: தமிழக விவசாயிகளுக்கு ரூ.2244 கோடி வறட்சி நிதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு, ரூ.300 கோடியாக நிதி விரிவுபடுத்தப்பட்டது. மேலும், ரூ.8000 மதிப்பில் பயிர்களுக்கு காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மலர்க் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. பல வண்ண மலர்கள், இந்தியாவில் உள்ள பன்முக மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை பறைச்சாற்றுவதாக உள்ளன.

இயற்கையின் கொடையாக நீலகிரி உள்ளது. இங்குள்ள 24 சிகரங்களில், 2637 மீட்டர் உயரம் கொண்ட தொட்டபெட்டா சிகரம் உள்ளது. மலர்கள் இயற்கை எழிலை காட்சிப்படுத்துகின்றன.

உலகில் உள்ள 34 பல்லுயிர் பெருக்க உயிர்சூழல் மண்டலங் களில் 4 இந்தியாவில் உள்ளன. மக்கள் தொகை பெருக்கம், வன அழிப்பு, புவி வெப்பமயமாதல், நகரமயமாதல் ஆகியவை இயற்கையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, இயற்கையை பாதுகாக்க வேண்டிய தருணம் இது. மக்கள் இயற்கை குறித்து அறிய, சென்னையில் உள்ள ராஜ்பவன் மக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் உதகை ராஜ்பவனில் உள்ள மர இனங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில், பல அரிய வகை மர இனங்கள் இருந்தது தெரிய வந்தது. இவற்றை ஒரு கையேடாக தயாரித்து வெளியிடப்பட்டது. இயற்கையை பாதுகாக்கும் வகையில் மர நடவு திட்டம் தொடங் கப்பட்டது. ஒரு மாணவர் ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் மாணவர்கள் மரம் நட வேண்டும் என்றார்.

கண்காட்சியின் முக்கிய அம்சமான சிறந்த பூங்காவுக்கான ஆளுநர் கோப்பையை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பெற்றது.

சிறந்த மலருக்கான முதல்வரின் தங்கக் கோப்பைக்கு ‘பேன்சி’ மலர் தேர்வு செய்யப்பட்டது. இந்த மலரை வளர்த்த உதகை ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனத்துக்கு முதல்வர் தங்கக் கோப்பை வழங்கப்பட்டது.

மலர்க் கண்காட்சியை முன்னிட்டு 51 சுழற்கோப்பைகள் உட்பட போட்டியில் பங்கேற்ற பூங்காக்களுக்கு 62, காட்சி நாள் போட்டியாளர்கள் 90 மற்றும் இதர பரிசுகள் என மொத்தம் 600 கோப்பைகள் வழங்கப்பட்டன.

எம்.பிக்கள் சி.கோபால கிருஷ்ணன், கே.ஆர்.அர்ஜூணன், வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x