Published : 09 Feb 2014 12:14 PM
Last Updated : 09 Feb 2014 12:14 PM

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் அசத்திய காவலர்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அனைவரும் ஒரு கணம் அசந்துபோனார்கள். அந்தி நேரத்தில் அரங்கேறிய, ஒரு காவலர் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா அது!

ஏ.எஸ்.பிரபு (30), திருப்பூர் சின்னக்கரை பார்க் கல்லூரி மாணவர். கல்லூரியில் வணிகவியல் முடித்துவிட்டு 3 முதுகலைப் பட்டத்தையும், ஓர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) படிப்பையும் முடித்துவிட்டு, திருப்பூர் மாநகர் நுண்ணறிவுப் பிரிவில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த இளைஞரின் முதல் கவிதை நூலை, மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு வெளியிட்டார். இவருக்கு, திருமணமாகி, குழந்தையும் உண்டு. கல்லூரி நாட்களில் எழுத ஆரம்பித்து, 10 ஆண்டுக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது என மிகுந்த மன நிறைவோடு பேசத் தொடங்கினார்.

"கல்லூரியில் படிக்கும் போது எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தில் மழை என்கிற கையெழுத்துப் பிரதியை, நண்பர்களோடு சேர்ந்து நடத்தினோம். மழை... மாத இதழ் தான். அதில், அதிகம் கவிதைகள் எழுதுவேன். அப்படித்தான் கவிஞரானேன். கல்லூரியில் கிடைத்த அங்கீகாரமும், தனிமரியாதையையும், கவிதை நூல்களை அதிகம் வாசிக்க வைத்தது. அந்த நேரத்தில் காவலர் பணியும் கிடைத்தது. பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் எழுத்துக்கு கொஞ்சம் இடைவேளை விழுந்தது.

ஆனால், ஆழ்மனதில் படியும் விஷயங்களை கவிதையாக கருத்தரிக்க வேண்டும் என முனைந்தேன். தொடர்ந்து அதற்கான முயற்சி எடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கப்பட்ட கவிதைகளை, நண்பர்கள், இன்று அழகான புத்தகத் தோரணமாக மாற்றிவிட்டனர். ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சொல் ரோஜர். 'இன்னும் சில நிமிடங்களில் நான் அங்கு இருப்பேன். கடைசித் தகவலை கேட்டுத் தெரிந்துகொண்டேன்' என்பது தான் அதன் பொருள்.

அந்த சொல் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. அதனால், அதையே கவிதைப்புத்தகத்திற்கு பெயராக்கிவிட்டேன். இதில், காதல் கவிதைகள் இல்லை. சமூகத்தின் மீதான பார்வை, கவிதையாக படிந்துள்ளது. இந்தப் புத்தகம் முதல் முயற்சி தான். அடுத்ததாக ஒரு கவிதைப் புத்தகமும், கதை புத்தகமும் எழுதும் முயற்சியில் இருக்கிறேன்" என்கிறார் இந்த காக்கி கவிஞர் பிரபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x