ரூ.25,020 கோடி முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?- ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கேள்வி

ரூ.25,020 கோடி முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?- ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கேள்வி
Updated on
2 min read

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கையெழுத்தான ஒப்பந்தங்களால் கடந்த 11 மாதங்களில் ரூ. 25,020 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவது உண்மை என்றால், இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்று ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் கேள்வி கேட்க முடியாத விதிகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவதையே முதல்வர் ஜெயலலிதா வாடிக்கையாக வைத்திருக்கிறார். தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிந்து வருவதாகவும், அதனால் தொழில் வளர்ச்சி பெருகும் என்றும் முதல்வர் கூறியிருப்பதும் இந்த வகையை சேர்ந்தது தான்.

சட்டப்பேரவையில் நேற்று 110-ஆவது விதியின் கீழ் தொழில்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, ''கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதுவரை 64 நிறுவனங்கள் ரூ.87,062 கோடி முதலீட்டில் தொழில் துவங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டன. அவை, இதுவரை ரூ. 25,020 கோடியே 48 லட்சம் முதலீடு செய்துள்ளன'' என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வராத முதலீடுகளை வந்து விட்டதாகக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு ஜெயலலிதா முயல்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு? என்பதை மத்திய தொழில் மற்றும் வணிகத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்த தொகை ரூ.19,811 கோடி மட்டுமே.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 2,24,160 கோடி முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் முன்வந்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறுவதில் உண்மை இல்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது. அதுமட்டுமின்றி 2016 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த தொகை ரூ.3539 கோடி மட்டுமே. இவை தமிழகத்தில் செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீடு மட்டுமே.

கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.501 கோடி மட்டும் தான். நடப்பு ஆண்டில் தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீட்டின் அளவு சரியாக தெரியவில்லை. ஒருவேளை உறுதியளிக்கப்பட்ட முதலீடு முழுமையாக வந்ததாக வைத்துக் கொண்டால் கூட அது அதிகபட்சம் ரூ.3500 கோடியாக மட்டுமே இருக்கும். கடந்த ஆண்டின் முதலீட்டையும் சேர்த்தால் ரூ.4000 கோடி வரை வந்திருக்கலாம்.

அவ்வாறு இருக்கும் போது 64 நிறுவனங்கள் ரூ.87,062 கோடி முதலீட்டில் தொழில் துவங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டன. அவை, இதுவரை ரூ. 25,020 கோடியே 48 லட்சம் முதலீடு செய்துள்ளன என்று ஜெயலலிதா கூறுவது பொய் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

முதலீட்டாளர் மாநாட்டின் முடிவில், தமிழகத்தில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அவற்றில் பெரும்பாலானவை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டிருந்தேன். அதை ஆதாரங்களுடன் மறுக்க தமிழக அரசால் இன்று வரை முடியவில்லை. ஆனால், வராத முதலீட்டை வந்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசும், முதல்வரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த மாநிலத்தில் எந்த நிறுவனம் எவ்வளவு தொழில் முதலீடு செய்தாலும் அதுபற்றி மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தவகையில் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து மத்திய அரசு அறிக்கைகள் வெளியிடுகிறது. அவ்வாறு மத்திய அரசு தெரிவிக்கும் முதலீட்டின் மதிப்புக்கும், தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் முதலீட்டின் அளவுக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாக இருக்கிறது. இவற்றில் எது உண்மை? எதை மக்கள் நம்புவது? என்பதை விளக்கவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

இதற்குப் பிறகும் தமிழகத்தில் 64 நிறுவனங்கள் ரூ.87,062 கோடி முதலீட்டில் தொழிற்சாலை பணிகளை தொடங்கி, கடந்த 11 மாதங்களில் ரூ. 25,020 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பது உண்மை என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவாரேயானால், அவற்றில் ஒவ்வொரு நிறுவனமும் செய்துள்ள முதலீட்டின் அளவு என்ன? அவை எங்கு, என்ன தொழிலில் செய்யப்பட்டுள்ளன? எத்தனை நிறுவனங்கள் பணிகளை முடித்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளன? அதன் மூலம் எத்தனை பேருக்கு நேரடி வேலை வழங்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்து ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதை செய்ய அவர் தயாராக இருக்கிறாரா? என்பது தான் எனது வினாவும், சவாலுமாகும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in