

விருதுநகரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பத்திர பதிவுத்துறை அலுவலர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் சாமியார் கிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன்(60). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி. விருதுநகர் நாகம்மாள் தெருவில் இவரது குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட பிள்ளையார் கோயில் சொத்தான லைன் வீடு உள்ளது. இதை, பாண்டுரங்கனின் பங்காளியான வெள்ளைச்சாமி என்பவர், அவரது மனைவி தமயந்திக்கு தானம் கொடுத்ததாக போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்து அபகரித்ததாகக் கூறப் படுகிறது.
இதுதொடர்பாக, பாண்டுரங் கன் மாநில பத்திர பதிவுத்துறை ஐஜி-க்கு புகார் அளித்திருந்தார். இதுபற்றி விசாரிக்க விருதுநகரில் உள்ள மாவட்ட பத்திரப் பதிவு அலுவலருக்கு ஐஜி உத்தரவிட் டார். இந்த மனு தொடர்பாக விருது நகர் மாவட்ட பத்திரப் பதிவு அலு வலக எழுத்தரும், விசாரணை அதிகாரியுமான ராஜபாளை யத்தைச் சேர்ந்த தங்கம்(57) என்பவர் விசாரணை நடத்தினார்.
இந்த விவகாரத்தில் பாண்டுரங் கனுக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தருமாறு அவரிடம் தங் கம் கேட்டுள்ளார். பின்னர். ரூ.3 ஆயிரத்துக்கு ஒப்புக்கொண்டுள் ளார். இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் பாண்டுரங்கன் புகார் கொடுத்தார்.
அதையடுத்து, விருதுநகரில் உள்ள மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தில் பாண்டுரங்கனி டம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விசாரணை அதிகாரி தங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர்.