வாக்குச்சாவடிக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை பார்வையிட ஏற்பாடு: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

வாக்குச்சாவடிக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை பார்வையிட ஏற்பாடு: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
Updated on
1 min read

வாக்குச் சாவடிக்கு வெளியே நடைபெறும் நிகழ்வுகளை இணையதளம் வழியாக பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு பணியில் ஈடுபட உள்ள 1635 அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி, தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. அதில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. இப்பயிற்சியை சிறப்பு பொது பார்வையாளர் மனோஜ் அகர்வால், பொது பார்வையாளர் பி.ஜவகர், காவல் பொது பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா, மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களில் பெரும்பான்மையானோர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியை முதல் முறையாக பயன்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் நிர்வாகம் வழங்கிய பயிற்சியால், அந்த இயந்திரத்தை சிறப்பாக இயக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்துள்ளது.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை பணப் பட்டுவாடா தொடர்பாக 140 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிட மிருந்து மொத்தம் ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கே தெரியாமல் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், கண்காணிக்கப்பட்டு வரு கிறது.

அதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படும். 70 நுண் பார்வையாளர்கள், சிறு சிறு தெருவாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30 பறக்கும் படை குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் பேசத்தெரிந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் இடம்பெற்று கண்காணித்து வருகின்றனர்.

நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு

அனைத்து வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவின்போது கண்காணிப்பு கேமராவைக் கொண்டு, இணைய சேவை மூலமாக நேரடியாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் வாக்குச் சாவடிக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்கள் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற் கான இணையதளம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in