

மருத்துவ பட்டமேற்படிப்பில் தங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வலியுறுத்தி சென்னையில் அரசு டாக்டர்கள் தர்ணா, உண்ணா விரதம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பில் சேருவதற்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை 9 மணி முதல் 10 மணி வரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறும்போது, “50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. நாளை (இன்று) தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலை 7 மணி முதல் 9 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ), சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி கூறிய அவர்கள், ‘புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட மாட்டோம். நோயாளிகள் பாதிக்காத வகையில் அடுத்தக் கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.
டிஎம்எஸ்-சில் போராட்டம்
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேருவதற்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு இருப்பதை நம்பிதான், நாங்கள் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகிறோம். அந்த 50 சதவீத இடஒதுக்கீடு இல்லை என்றால், எங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்” என்றனர்.