

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் காலை திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம் மன் கோயில் யானை காந்திமதி முதலாவதாக வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து கோயில், மடாலயங்களின் யானைகளும் ஒவ்வொன்றாக அழைத்து வரப்பட்டன.
முகாமில் யானைகளின் எடை, உயரம் கணக்கிடப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பவானி ஆற்றில் இருந்து நீர் எடுத்து யானைகளை குளிப்பாட்ட ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நேற்று காலை அனைத்து யானைகளையும் குளிக்க வைத்து, அலங்கரித்தனர். அதைத் தொடர்ந்து பூஜையும், தொடக்க விழா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் கொடுத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி முகாமை தொடங்கிவைத்தார்.
3 அடுக்கு பாதுகாப்பு
பவானியாற்றின் கரையோரம் 5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 27 கோயில் யானைகள், மடாலயங்களில் உள்ள 5 யானைகள், புதுச் சேரியில் இருந்து 2 யானைகள் பங்கேற்கின்றன. நேற்றைய நிலவரப்படி, 31 யானைகள் முகா முக்கு வந்தடைந்தன. மீதமுள்ள 3 யானைகள் விரைவில் வந்து சேரும் எனவும், முகாமில் பங்கேற்காத 7 யானைகளுக்கு அவற்றின் இருப் பிடங்களிலேயே நலவாழ்வு முகாம் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானைகள் ஊடுருவலைத் தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு, செய்யப்பட் டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்த லின்படி 11 வகை பசுந்தீவனங்கள், 5 வகை தானியங்கள், 7 வகை ஆயுர்வேத மருந்துகள் யானைகளுக்கு வழங்கப்படுகின்றன.