

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக நகரங்களில் வெப்பநிலை நேற்று கணிசமாக குறைந்தது.
தென்கிழக்கு வங்கக் கடலில், அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த இரு வாரங்களாக சுட்டெரித்து வந்த வெயில், நேற்று கணிசமாக குறைந்தது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “வங்கக் கடலில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து வரும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப் புள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் நிலவியதுடன், குளிர்ந்த காற்றும் வீசியது. மேலும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சுட்டெரித்து வந்த வெயில் நேற்று கணிசமாக குறைந்திருந்தது.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையின்படி, கரூர் பரமத்தி மற்றும் சேலத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சியில் 102.38, தருமபுரி மற்றும் மதுரையில் 102.2, பாளையங்கோட்டையில் 100.4, கோவையில் 98.6, வேலூரில் 98.06, சென்னையில் 92.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காற்றழுத்தமானது, தாழ்வு மண்டலமாக மாறிய பின்னரே தமிழகத்துக்கான மழை வாய்ப்பு குறித்து கூற முடியும்” என்றார்.