

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனை தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உறுதி அளித் தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எனது கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் இயங்கும் அரசு புறநகர் மருத்துவமனையை தரம் உயர்த்தி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 1,300 வெளி நோயாளிகள் வருகின்றனர். 80 முதல் 85 உள் நோயாளிகள் சிகிச்சை பெறு கின்றனர். இங்கு சூரியசக்தி மின் பிரிவை ஏற்படுத்த எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கியுள்ளேன்.
தொகுதி எம்எல்ஏ என்ற முறை யில் இந்த மருத்துவமனைக்கு பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், தனியாக ஆம்புலன்ஸ் சேவை வேண்டும், எலும்பு, மூட்டு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும், தொற்று நோய்களுக்கான சிறப்பு மருத் துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், டாக்டர்கள், செவி லியர்கள் குடியிருப்பை புதிதாக கட்ட வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதனை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
அவருக்கு பதிலளித்த அமைச் சர் சி.விஜயபாஸ்கர், ‘‘பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை 22-4-2015 முதல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 7-7-2015 முதல் தொற்று நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக இது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இங்கு ஒரு மருத்துவர், 2 செவிலியர் இடங்கள் காலியாக உள்ளன. இவை விரைவில் நிரப்பப்படும். ஸ்டாலினின் மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்’’ என்றார்.