Published : 27 Jun 2016 02:12 PM
Last Updated : 27 Jun 2016 02:12 PM

கொலை மாநகரமாக மாறி வருகிறது சென்னை: சுவாதியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின் பேட்டி

சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில், இது ஒரு கொலை மாநகரமாக மாறிக் கொண்டு வருகிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோரை சந்தித்து, திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்,

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

"மூன்று தினங்களுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஏற்கெனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் எடுத்து வைத்திருக்கிறேன்.

குறிப்பாக இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி வந்ததற்கு பின்னால், இந்த குறுகிய காலத்திற்குள்ளாக தொடர்ந்து சென்னை மாநகரத்தில் கூலிப்படையினரால் நடத்தப்பட்டு இருக்கக்கூடிய கொலைகள் குறித்து இன்றைக்கு கூட திமுக தலைவர் ஒரு பட்டியலையே வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலே ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தில் நான் பங்கேற்று உரையாற்றிய போது கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, "ஐஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, அந்த குழு என்ன பணி செய்து கொண்டிருக்கிறது?" என்ற கேள்வியை கேட்டேன். அதற்கு சட்டமன்றத்தில் எனக்கு அளித்த பதில் என்னவென்று கேட்டால், "தமிழ்நாடு அமைதி பூங்கா" ஆக இருக்கிறது என்ற தவறான தகவலை சட்டமன்றத்தில் முதலமைச்சரே பதிவு செய்திருப்பது வேதனைக்குரிய ஒன்று.

சிபிஐ டைரக்டராக பணியாற்றி ஓய்வுபெற்ற ராகவன், ஆங்கிலப் பத்திரிக்கையில் நேற்றைய தினம் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் "சுவாதி கொலையானது தமிழக போலீசாருக்கும், ரயில்வே போலீசாருக்கும் வெட்கக்கேடானது. சென்னை போலீஸார் மீது படிந்திருக்கும் இந்த கரையை துடைக்க முடியாத அளவிற்கு ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது" என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்.

இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய அதிமுக அரசு, முதலமைச்சராக உள்ள ஜெயலலிதா, ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது 2013-ம் ஆண்டில், "பெண்களுக்கு உரிய பாதுகாப்புச் சட்டம்" என்று 13 அம்ச சட்ட, திட்டங்கள் கொண்ட ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.

அது செயல்படுகிறதா என்பது இதுவரை கேள்விக்குரியதாக இருந்து வருகிறது. அதிமுக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தார்கள். அதே மாதம் 30-ம் தேதி எழும்பூர் புற்றுநோய் நிபுணர் ரோகிணி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு இருக்கிறார். ஜூன் மாதம் 5-ம் தேதி சூளைமேட்டில் வழக்கறிஞர் முருகன் கொல்லப்பட்டு இருக்கிறார்.

ஜூன் மாதம் 7-ம் தேதி ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர் பாரஸ்மால் ஜெயின் என்பவர் சூளை பகுதிக்கு அருகில் கொல்லப்பட்டு இருக்கிறார். ஜூன் மாதம் 14-ம் தேதி குரோம்பேட்டை கிருஷ்ணவேணி கொல்லப்பட்டு இருக்கிறார்.

ஜூன் மாதம் 16-ம் தேதி புழல் காவலங்கரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அகில்நாத் கொல்லப்பட்டு இருக்கிறார். ஜூன் மாதம் 19-ம் தேதி நகைக்காக பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த தேன்மொழியும், அவருடைய மகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜூன் மாதம் 22-ம் தேதி வியாசர்பாடியில் வழக்கறிஞர் ரவி வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் 25-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுவாதி என்ற பெண்ணும் கொல்லப்பட்டு இருக்கிறார்.

ஆக, இன்றைக்கு சென்னை மாநகரத்தினை பொறுத்தவரையில் இது ஒரு கொலை மாநகரமாக மாறிக் கொண்டு வருகிறது. இது வீதியில் பணிக்காக செல்லக்கூடிய பெண்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு பரிபூரண சுதந்திரம் அளித்து ரவுடியிஸத்தை, கூலிப்படைகளை, தயவு தாட்சயன்மின்றி அடக்கி ஒடுக்கி தமிழக மக்கள் “அப்பாடா, பாதுகாப்பாக இருக்கிறோம்” என்ற நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல் சுவாதி கொலையில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்" என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x