

பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் காணாமல் போன தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில் என் மகள் ஐஸ்வர்யா திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார். அவர் திடீரென காணாமல் போய்விட்டார். அவரை மனோகர் என்பவர் கடத்திச் சென்றதாக தெரிகிறது. எனவே, அவரை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அந்த வழக்கு நீதிபதிகள் வி.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் விசாரணை நடத்தியபோது காதலனுடன்தான் செல்வேன் என அந்த மாணவி கூறினார். எனவே, அந்த மாணவி திருமண வயதை அடைந்ததால் காதலனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது கூறிய நீதிபதிகள் சட்டப்படி ஆணுக்கான திருமண வயது 21 எனவும், பெண்ணுக்கான திருமண வயது 18 எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், 18 வயதில் திருமணம் முடியும் பெண் உடல் மற்றும் மனரீதியாக வளர்ச்சி அடைவதில்லை.
அதேநேரத்தில் பருவக்கோளாறு, அறியாமை உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் இதுபோன்ற தவறான பாதையில் சென்றுவிடுகின்றனர்.
எனவே, பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.