Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

பாஜக அணிக்கு தேமுதிக வரவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறையினர் உள்பட 600 பேர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சனிக்கிழமை நடந்தது.

ஹரிகரன், அனிதா, மகேஸ்வரி மற்றும் கவுரி தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் 300 பேரும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபால் தலைமையில் 200 பேரும், கோவையைச் சேர்ந்த மாரிமுத்து தலைமையில் 100 பேரும் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

பின்னர், நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக மக்களின் உணர்வுகளில் பா.ஜ.க. கலந்து வருகிறது. அதனால்தான் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பா.ஜ.க.வில் இணைகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். ‘வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை’என்ற பிரச்சார யாத்திரையை இதுவரை 4 ஆயிரம் கிராமங்களில் நடத்தி முடித்துள்ளோம். கடந்த 22-ம் தேதியுடன் முடிவதாக இருந்த இந்த யாத்திரை, ஜனவரி 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் 10 ஆயிரம் கிராமங்களில் யாத்திரையை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

கட்சியின் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம், ஜனவரி 3-ம் தேதி திருச்சியில் நடக்கிறது. மீனவர்கள் பிரச்சினையை மையப்படுத்தி, ஜனவரி 31-ம் தேதி, கடல் தாமரை போராட்டம் நடத்தப்படும். இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வின் பல்வேறு அணிகள் சார்பில், மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். அவ்வாறு விரும்பும் அரசியல் கட்சிகள், பா.ஜ.க. அணியில் இணைய உள்ளன. தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறோம். அப்படி இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம்.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரியில் தமிழகம் வரவுள்ளார். டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து

களை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் பாராட்டும் முதல்வராக அவர் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் மோகன்ராஜுலு மற்றும் அலுவலக செயலாளர் சர்வோத்தமன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x