

கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மக்களவைத் தேர்தலில் அதிமுக.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இதனை, கோவையில் திங்கள் கிழமை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் அக் கட்சியின் நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
பொதுக்குழு தீர்மானப்படி அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை இந்த தேர்தலில் தருவது என முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்துவிட்டோம். அவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
கொங்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இங்கு அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்றார்.