

நீலகிரியை கடந்த 15 நாட்களாக மனித வேட்டை புலி அச்சுறுத்திவரும் நிலையில் புலிகள் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை `தி இந்து' விடம் பகிர்ந்து கொள்கிறார் உலகளாவிய வன உயிரினங்களின் நிதியமைப்பை சேர்ந்த மோகன்ராஜ். அவர் கூறுகையில்,
மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லும் குணம் கொண்டது புலி. இது மனித வேட்டைப் புலியாக மாறுவது அதன் பலவீனத்தால் தான். ஒரு ஆண் புலி 25 சதுர கி.மீ., பரப்பில் வசிக்கக் கூடியது. பல பெண் புலிகளும், ஆண் புலியின் கட்டுப்பாட்டில் வாழும்.
நீலகிரி மாவட்டம் சீகூர் சரகத்தில் ஒரு ஆண் புலி 60 சதுர கி.மீ., பரப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பரப்பில் 5 பெண் புலிகள் இருந்தன. ஆண் புலிகள் மட்டுமின்றி பெண் புலிகள் மத்தியிலும் அதிகாரப் போட்டி நிலவுகிறது.
பொதுவாக ஆண் புலிகள் மத்தியில் அதிகாரப் போட்டி ஏற்பட்டு பலவீனமான புலிகள் கூட்டத்திலிருந்து துரத்தப்படும். மேலும், பெண் புலிகள் தனது சந்ததியினரை வளர்க்க பிற புலிகளிடம் சண்டையிட்டு துரத்தும். இவ்வாறாக துரத்தப்படும் புலிகள் பலவீனமாகவே இருக்கும். பல நேரங்களில் இந்த புலிகள் காயமுற்று இரை தேட முடியாத நிலையில் இருக்கும்போதுதான் இவற்றின் எளிய இலக்காகிறான் மனிதன். புலி பின்புறத்தில் தாக்கும் வேட்டைத் திறன் படைத்தது. இதனால் மனிதர்கள் குனிந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஏதோ விலங்கு எனக் கருதியே முதலில் மனிதர்களை தாக்குகிறது.
மனிதனின் உடல் மற்றும் ரத்தத்தில் உள்ள உப்பு ருசியால் ஈர்க்கப்பட்டு மனித வேட்டைப் புலியாக மாறி விடுகிறது. மனிதனை வேட்டையாடிப் பழகி விட்டால் இவை மீண்டும் தனது இயல்பான வேட்டைக் குணத்துக்கு மாறாது, இவை மிகவும் ஆபத்தானவை. இவை பதுங்கியிருந்து தாக்கும் என்பதால் இவற்றை பிடிப்பது பெரும் சவாலான விஷயம் என்றார்.
உலகை அச்சுறுத்திய மனித வேட்டையர்கள் மனித வேட்டையில் சிங்கம், புலி, கரடி மட்டுமின்றி முதலைகள், சுறாக்களும் இடம் பெற்றுள்ளன. 1932ம் ஆண்டு ஆப்ரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் சிங்கங்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து 1500 மனிதர்களைக் கொன்றன. ஜார்ஜ் ரஷ்பி என்ற வேட்டைக்காரர் 15 சிங்கங்களை கொன்றுள்ளார்.
1900 க்களில் ஒரு வங்கப் புலி, மனித வேட்டைப் புலியாக மாறி 200 பேரைக் கொன்றது. இந்தப் புலி இமாயலப் பகுதிக்குச் சென்று நேபாளத்தில் 436 மனிதர்களைக் கொன்றது. இந்தப் புலியை 1911ம் ஆண்டு, பிரபல வேட்டைக்காரர் ஜிம்கார்பட் சுட்டுக்கொன்றார்.
1915ல் ஜப்பானில் ஒரு கரடி ஆண்டுக்கு 40 மனிதர்களைக் கொன்றுள்ளது. 1950ல் மைசூரில் ஒரு கரடி பல மனிதர்களை தாக்கிக் கொன்றது. இந்தக் கரடியை பிரபல வேட்டைக்காரர் கென்னத் ஆண்டிசன் சுட்டுக்கொன்றார். இவரே, நீலகிரி மாவட்டம் சீகூரில் 1954ம் ஆண்டு 15 பேர்களை கொன்ற புலியை சுட்டுக்கொன்றார்.