

நடிகை த்ரிஷாவிடம் முன்பு கார் டிரைவராக இருந்தவர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னை சேலையூர் சுற்று வட்டார பகுதிகளில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும், மோட்டார் சைக்கிள் திருட்டும் அடிக்கடி நடந்தன.
காவல் துறையினருக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன. குற்றவாளிகளைப் பிடிக்க பரங்கிமலை துணை ஆணையர் சரவணன் தனிப்படை அமைக்க உத்தர விட்டார். தனிப்படை காவல் துறையினர் வேளச்சேரி பிரதான சாலையில் சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள் களில் வந்த 3 பேர் போலீஸாரைப் பார்த்ததும் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் எண்களை போலீஸார் குறித்து, அந்த எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தை சேர்ந்த குமார்(26) என்பவரின் மோட்டார் சைக்கிள் அது என்பது தெரிந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பல இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.
குமார் கொடுத்த தகவலின் பேரில் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ்(20), விவேக்(19) ஆகியோரும் கைது செய் யப்பட்டனர். நண்பர்களான 3 பேரும் சேர்ந்து செயின் பறித்ததும், மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிந்தது.
போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட குமார் நடிகை த்ரிஷாவிடம் கார் டிரைவராக இருந் திருக்கிறார். இதைப் பயன்படுத்தி நண்பர்கள் விவேக், விக்னேஷை பல இடங்களுக்கு திரைப்பட சூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு தவறான தொடர்புகள் ஏற்பட, அதற்கு அதிக பணம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக 3 பேரும் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 30 சவரன் நகைகள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூவரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
மாதவரம் பால்பண்ணை எம்.சி.ஜி. அவென்யூ 5-வது தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீனாட்சி. செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார் மீனாட்சி.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் மீனாட்சி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.