

நாமக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது கண்டனத்திற்குரியது. மீனவர் குப்பம், தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் காவல் துறையினர் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைக் கண்டித்து மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் நாளை (28-ம் தேதி) சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
அவசரச் சட்டம் பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் 7 நாட்கள் வரை போராட்டத்தை அனுமதித்தவர்கள் அவசரச் சட்டம் கொண்டுவந்த ஒரு சில மணி நேரத்திலேயே, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்ற ஆதிக்கத்தை நிலைநாட்டப்பார்த்ததன் விளைவு தான் இந்த வன்முறைக்குக் காரணம்.
தேச விரோத, சமூக விரோத சக்திகள் போராட்ட களத்தில் ஊடுருவிட்டன என்று கூறுவது அபத்தமானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தபோதிலும் எந்த இடத்திலும் வன்முறைக்கு இடம் தரவில்லை. இந்த வன்முறை வெடித்ததற்கு முழுக்க அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களை கண்டித்து வரும் பிப்ரவரி 2-ம் தேதி அனைத்து மாவட்ட தலைமையிடத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரியலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.