

வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப். 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் தமிழகத்தில் அமலில் இருக்கும்.
அதுபோல கேரளா, லட்சத்தீவு பகுதி உட்பட மேற்கு கடல் பகுதியில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31 வரை (61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலத்தை முன்னிட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு கள் கடலுக்குச் செல்லாமல் கடற்கரையில் ஆழம் குறைந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், தொண்டி, எஸ்.பி பட்டினம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீ்ன்பிடித் துறைமுகத்தில் கரையோரங்களில் நங்கூரமிட்டுள்ளன.
இந்நிலையில் கேரளா, லட்சத்தீவு மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலத்தில் மீன் பிடித்து வருவதாக ராமேசுவரம் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பாம்பனைச் சேர்ந்த விசைப்படகு மீனவர் அருள் கூறியதாவது:
கடந்த ஆண்டு வரை 45 நாட்கள் தடை விதிக்கப்பட்ட மீன்பிடி தடைக்காலம் இந்த ஆண்டில் இருந்து 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக் காலத்தால் குடும்பச் செலவுக்குக்கூட சிரமப்பட்டு வருகிறோம். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் அண்டை மாநிலங்களுக்கு பிழைப்பு தேடிச் சென்றுள்ளனர்.
ஆனால், தமிழக கடற்பகுதிகளில் கேரளா, லட்சத்தீவு மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆழ்கடல் விசைப்படகுகள் மீன் பிடித்து வருகின்றன. தமிழகத்தின் கரைப் பகுதிகளிலேயே மீன் பிடிப்பதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் நேரத்தில் அண்டை மாநிலங்களையும், அண்டை நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதையும் தடுக்காவிடில் மீன்பிடி தடைக் காலத்தை அமல்படுத்துவதில் அர்த்தம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.