

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பில் வார்டுக்கு இரண்டு பேர் வீதம் கட்சி சீனியர்கள் பட்டியல் தயாரிப்புப் பணி அதிமுகவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதனால், எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில், கடந்த 31-ம் தேதி அவசரக் கூட்டம் நடந்தது. அதையடுத்து 3 நாளைக்குள் சாதாரணக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதுவே இந்த மாமன்றத்தின் கடைசிக் கூட்டமாக இருக்கும் என்றும் கவுன்சிலர்கள் மத்தியில் பேச்சு நிலவி வந்தது. அந்த கடைசிக் கூட்டம் தள்ளிப் போகும் நிலையில் கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு வார்டிலும் கட்சியில் உள்ள முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் சீனியர்கள் 2 பேரை பரிந்துரைக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் கேட்டுள்ளதாகவும், அதை பகுதிக் கழகச் செயலாளர்கள் குறிப்பிட்ட நபர்களின் விவரக் குறிப்புகளும் சேர்த்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, மாவட்டச் செயலாளர்களும் அந்த இருவரில் ஒருவரை தேர்வு செய்து ‘உனக்குத்தான் இந்த வார்டில் சீட்’ என்று குறிப்பிட்டு, அதற்கேற்ப பணிகளை தொடங்கவும் கேட்டுக்கொண்டுள்ளனராம்.
இதுகுறித்து அதிமுக கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:
எப்படியும் வரும் 25-ம் தேதிக்குள் தேர்தல் அறிவிக்கப் பட்டுவிடும் என்று எதிர்பார்க் கிறோம். 50 சதவீதம் வார்டுகள் பெண்களுக்கு என்பதால் அவை எவை என்பது இன்னமும் ஓரிரு நாட்களில் தெரிய வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன்னதாகவே வார்டுக்கு இருவர் பட்டியல், பகுதிச் செயலாளர்களிடம் கேட்கப் பட்டிருந்தது. அதில், தற்போதைய கவுன்சிலர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதை பகுதிச் செயலாளர், கிளைகளில் சம்பந்தப்பட்டவரிடம் ‘போட்டியிட விருப்பமா? செலவு செய்ய முடியுமா?’ என்று கேட்டுவிட்டே பதிவு செய்கிறார்.
சிட்டிங் கவுன்சிலர்கள் பலர் போட்டியிட விருப்பம் இல்லாத நிலை உள்ளது.
அதற்குக் காரணம் கடந்த 5 வருடத்தில் சொல்லிக்கொள்ளும்படியான வேலைகள் நடக்கவில்லை. சென்னை மாநகராட்சியில் உள்ளது போன்ற வருமானமும் இல்லை. இந்த தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் நிச்சயம் குறைந்தபட்சம் ரூ. 25 லட்சம் வரை செலவு செய்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.
அதை செய்ய புதியவர்கள்- குறிப்பாக ‘வசதி’ உள்ளவர்கள் நிறைய பேர் தயாராக உள்ளனர். தவிர, கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்வதால் அதற்கு எத்தனை செலவானாலும் பார்க்கலாம் என்ற நிலையிலும் இந்த புதியவர்கள் உள்ளனர். அதனால் அவர்களுடன் போட்டி போடுவது சிரமம். இருந்தாலும், சீட்டே கேட்காமல் விட்டால் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டு விடுவோமோ?’ என்ற அச்சத்திலும் சீட் கேட்கிறோம்.
தற்போது திமுகவில் வார்டு வாரியாக உள்ள பிரமுகர்களின் கை வலுத்து வருகிறது. இந்த வலுவில் வெற்றி பெறாவிட்டால் மேலும் சிக்கலாகுமே என்ற தயக்கமும் நிறைய பேருக்கு உள்ளது.
கோவை மாநகராட்சியில், மாநகரச் செயலாளர் கட்டுப்பாட்டில் 79 வார்டுகளும், புறநகரச் செயலாளர் கட்டுப்பாட்டில் 21 வார்டுகளும் வருகின்றன. இதில் 79 வார்டுகளுக்கு யாருக்கு சீட் என்பதை முடிவு செய்து பட்டியல் தயாரித்துவிட்டதாகவே தெரிகிறது. மற்ற 21 வார்டுகளிலும் யார் என்பது ஓரிரு நாட்களுக்குள் முடிவு செய்துவிடுவர் அந்த பொறுப்பாளர்கள். அதன் பிறகு வார்டு வாரியாக குறிப்பிடப்பட்ட பிரதிநிதிகள் பணிகளை ஆரம்பித்துவிடுவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.