

தி இந்து செய்திகளின் எதிரொலியாக, ஸ்டான்லி சுரங்கப் பாதையை உடனே திறக்கக் கோரியும், தங்க சாலை பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று சென்னை, ராயபுரம் பகுதியில் சாலை மறியல் நடந்தது. 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஸ்டான்லி ரயில்வே சுரங்கப் பாதை பணி முடிந்து, 3 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாதது குறித்தும், முடிவுக்கு வராத தங்கசாலை மேம்பால பணி குறித்தும், கடந்த புதன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், ‘தி இந்து‘ விரிவான செய்திக் கட்டுரைகள் வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட ஸ்டான்லி சுரங்கப் பாதையை உடனே திறக்கவேண்டும். தங்கசாலை பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் வரை விரிவுபடுத்த வேண்டும். பழமையான ராயபுரம் ரயில்நிலையத்தை ரயில் முனையகமாக மாற்றவேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து, ராயபுரம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வியாழனன்று காலை, ஸ்டான்லி சுரங்கப் பாதை அருகே, ராயபுரம் எம்.சி. சாலையில், சாலை மறியல் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலர் கிருஷ்ணன், முன்னாள் பெரம்பூர் எம்.எல்.ஏ., எஸ்.கே. மகேந்திரன், ராயபுரம் பகுதி செயலர் செல்வானந்தம், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் திருவேட்டை, ராயபுரம் தொகுதி செயலர் வெங்கட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைந்திய மாதர் சங்கத்தினர், நடை பாதை வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என திரளானோர் இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் கைது செய்து, கல்மண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து, மாலையில் விடுவித்தனர்.