Published : 09 Mar 2014 12:00 AM
Last Updated : 09 Mar 2014 12:00 AM

தாமதமாக வரும் பேருந்துகள் கால்கடுக்க நிற்கும் பயணிகள்: அரசுக்கும் இழப்பு- கவனிப்பார்களா அதிகாரிகள்?

சென்னையில் பல பகுதிகளில் மாநகரப் பேருந்துகள் சீராக வருவதில்லை. வெகுநேரம் வரை பேருந்தே வருவதில்லை. வந்தால் நாலைந்தாக சேர்ந்து வருகின்றன என்று மக்கள் புகார் கூறுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் 769 வழித்தடங்களில் 3,400-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தாம்பரம், பிராட்வே, கோவளம், வண்டலூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 100 ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் பெரும்பாலான மக்கள் பயணத்துக்கு பஸ்களையே நம்பி இருக்கின்றனர். சென்னையின் எல்லைப் பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு பல்வேறு பணிக்கு வந்து செல்கின்றனர். இருப்பினும் சீரான பஸ் வசதி இல்லாததல் பயணிகள் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது.

‘இப்ப வருமோ..

எப்ப வருமோ?’

முக்கியமான வழித்தடங்களில் முக்கால் மணி நேரம் வரை பஸ்களே வருவதில்லை. நேரம் ஆகஆக பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் கூடுகிறது. வந்தால் தொடர்ந்து 3 அல்லது 4 பஸ்கள் அணிவகுத்து வருகின்றன. குறிப்பாக 18K (மேற்கு சைதாப்பேட்டை - பிராட்வே) 12B (வடபழனி - பட்டினப்பாக்கம்), 5B (தி.நகர் - மயிலை), 21G (தாம்பரம் - பிராட்வே), 19G (பிராட்வே - கோவளம்), 45B (கிண்டி - அண்ணா சதுக்கம்), 23C (அயனாவரம் – பெசன்ட் நகர்), 5E (வடபழனி - பெசன்ட் நகர்) உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த நிலை உள்ளது.

காலியாக செல்லும் பஸ்கள்

இதுதொடர்பாக அண்ணா சாலையில் பேருந்துக்காக காத்திருந்த குமார், ஸ்டாலின், என்.பி.சாமி, தினேஷ், தீபா ஆகியோரிடம் கேட்டபோது, ‘‘மாநகரத்தின் உள்பகுதிகளில் பஸ்கள் அதிக அளவிலும் சீரான நேரத்திலும் செல்கின்றன. புறநகர் பகுதிகளை இணைக்கும் பஸ்கள் வருவதற்கு சுமார் 45 நிமிடங்கள் வரை ஆகிவிடுகிறது. ஆனால், அதன்பிறகு ஒரே வழித்தடத்தில் மூன்று நான்கு பஸ்கள் அணிவகுத்ததுபோல வருகின்றன. பேருந்து நிறுத்தங்களில் நின்றிருக்கும் கூட்டம் முழுவதும் அதில் முதல் 2 பேருந்துகளில் ஏறிவிடும். அடுத்து வரும் 2 பேருந்துகளும் காலியாகச் செல்லும். இப்படி நான்கு பஸ்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றுவிட்ட பிறகு, அடுத்த முக்கால் மணி நேரத்துக்கு அந்த ரூட்டில் பஸ் இருக்காது. பயணிகள் காத்துக் கிடப்பார்கள். பஸ்கள் இப்படி சீரற்ற இடைவேளையில் வருவதால் பயணிகளுக்கும் அவதி. போக்குவரத்துக் கழகத்துக்கும் வருவாய் இழப்பு. எனவே, பஸ்களை சீராக இயக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயணிக்கும் காலை, மாலை நேரங்களில் திட்டமிட்டு பஸ்களை சீராக இயக்க வேண்டியது அவசியம்’’ என்றனர்.

ஆட்டோக்களை அனுசரிக்கிறார்களா?

சில பகுதிகளில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களை அனுசரித்து மாநகரப் பேருந்துகளை ஓட்டுநர், நடத்துநர்கள் இயக்குகின்றனர். பேருந்துகள் சீரான இடைவேளையில் வராமல் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம் என்ற புகாரும் கூறப்படுகிறது.

டிராபிக்கால் தாமதம்

இதுபற்றி கேட்டபோது போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையின் பல இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக அண்ணா சாலையில் நடக்கும் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டியுள்ளது. இதனால்தான் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பஸ்கள் சென்றடைய முடிவதில்லை. வேறு காரணம் எதுவும் இல்லை. சரியான நேரத்தில்

பஸ்களை இயக்க பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x