காங். ஆட்சியே பெண் குலத்திற்கு பொற்காலம்: ஞானதேசிகன்

காங். ஆட்சியே பெண் குலத்திற்கு பொற்காலம்: ஞானதேசிகன்
Updated on
1 min read

பெண் குலத்திற்கு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு, நாட்டில் பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய சட்டங்களும் திட்டங்களும் வழிவகுத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி அவர் இன்று வெளியிட்ட செய்தி:

"இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தமிழ் மொழியும், இயற்கைப் படைப்புகளும் தாயாகவே பெருமைப்படுத்தப்பட்டு வணங்கப்படுவது சமுதாயத்தில் பெண்களின் உயர்வுக்கு சிறந்த உதாரணங்களாகும்.

சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை திருத்தி பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரித்தும், பணியாற்றும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியது.

அத்துடன், இந்திய வாரிசுரிமை சட்டத்தை திருத்தி, சொத்தில் பெண்களுக்கு சம பங்கு, இல்லங்களில் நடக்கின்ற வன்கொடுமை தடுப்புச் சட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, பிறந்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை, பெண்களுக்கு பேறு காலத்தில் சத்துணவு, ராணுவத்தில் பெண்களுக்கு இடம் இவையெல்லாம் வரலாற்றில் பெண் குலத்திற்கு பொற்காலம் என்று சொல்லத்தக்க வகையில் பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு என மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய சட்டங்கள்; மற்றும் திட்டங்கள் ஆகும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்குவதற்கு வங்கிகளின் மூலம் மானியம், பெண்களுக்கென்றே தனியாக வங்கி என்று மத்திய அரசு செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை என்ற பாரதி கண்ட புதுமைப் பெண்கள் உருவாக வேண்டும். பயமற்ற ஆணாதிக்கமில்லா சமுதாயம் உருவாக வேண்டும் என்று உலக மகளிர் தினத்தன்று உறுதிமேற்கொண்டு, அனைத்து மகளிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in