Published : 07 Jun 2016 10:03 AM
Last Updated : 07 Jun 2016 10:03 AM

சட்ட விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து சென்னையில் வழக்கறிஞர்கள் திரளாகப் பேரணி: திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தீர்மானம்

வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று வழக்கறிஞர்கள் பேரணி நடத்தினர். சட்டத் திருத்தங்களை முழுமையாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஒழுங்கீனமாக நடந்துகொள் ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது. வழக்கறிஞர் சட்டம் 1961, பிரிவு 14 ஏ, பி, சி, டி ஆகியவற்றில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி, தவறு செய்யும் அல்லது மது அருந்தி ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றங்களே நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் பெயரைக் கூறி வழக்கறிஞர் பணம் வாங்கினார் என புகார் அளித்தால் அந்த வழக்கறிஞரை நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்யும். உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டத் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெறக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சென்னையில் நேற்று பேரணி நடத்தினர். திருவல்லிக்கேணி டி-1 காவல் நிலையம் முன்பாக பேரணியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தொடங்கி வைத்தார். தமிழகம், புதுச்சேரி அடங்கிய 135-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் சங்கங் களில் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

பின்னர் சேப்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அறிவழகன், மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத், அகில இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநிலக்குழு பொதுச் செயலாளர் என்.முத்து அமுதநாதன், தமிழ்நாடு - புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு செயலாளர் பி.பரமசிவம் உட்பட பலர் பேசினர்.

பல்வேறு மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகள் பேசும்போது, ‘‘ஆங்கிலேயர் காலத்தில்கூட இதுபோன்ற கருப்புச் சட்டங்கள் நம்மிடம் இல்லை. வழக்கறிஞர் களின் உரிமையை, மாண்பை பறிக்கும் இந்த சட்டத் திருத்தங்கள் தேவைதானா என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும். வழக்கறிஞர் தவறு செய்தால் நீதிபதிகள் நேரடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறும் இந்த சட்டத் திருத்தம், தவறு செய்யும் நீதிபதிகள் மீது வழக்கறிஞர்கள் புகார்கூட கொடுக்கக்கூடாது என் கிறது. இதுபோன்ற முரண்பாடு களைத்தான் எதிர்க்கிறோம்’’ என்றனர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறியபோது, ‘‘சட்டத் திருத்தத் துக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் எவ்வளவு எதிர்ப்பு அலை இருக் கிறது என்பதைக் காட்ட அமைதியான முறையில் பேரணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் கருத்து களை கேட்ட பிறகுதான் இதில் ஒரு முடிவுக்கு வரவேண்டும். இது தொடர்பாக மாநில அளவில் கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு, அதில் எடுக்கப்படும் முடிவுகளின் படி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார். இதுதொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x