Published : 28 Feb 2014 09:50 AM
Last Updated : 28 Feb 2014 09:50 AM

அரசு ஊழியர் வயதை 62 ஆக உயர்த்திய மத்திய அரசுக்கு கண்டனம்: கி. வீரமணி அறிக்கை

மத்திய அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வியாழக்கிழமை அறிக்கை: மத்திய அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ல் இருந்து 62 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுடைய எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சண்டிகரில் உள்ள தொழில் அமைச்சகப் பிரிவு '' இளைஞர்களின் வேலைவாய்ப்பு - வேலைவாய்ப்பின்மை என்ற தலைப்பில் 2012 ம் ஆண்டு அக்டோபர் முதல் 2013 ம் ஆண்டு மே மாதம் வரை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுடைய வயதை 62 ஆக உயர்த்தி இருப்பதால் சுமார் 3 லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்.

மேலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மூட நம்பிக்கையின் மறு வடிவமான ஜோதிடத்தைப் பட்டய வகுப்பாக நடத்தவிருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

விஞ்ஞானத்தைப் பரப்ப வேண்டியது அனைத்துக் குடிமகனின் அடிப்படை கடமை என்று இந்திய அரசமைப்பு சட்டத்தில் 51 ஏ(எச்) பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பல்கலைக்கழகத்தில் ஜோதிடப் பாடத்திட்டம் வைப்பதைக் கண்டித்து மார்ச் 3 ல் தஞ்சை ரயில்வே சந்திப்பு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x