மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.20 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனை முடங்கியது - நாடு முழுவதும் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்

மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.20 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனை முடங்கியது - நாடு முழுவதும் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்
Updated on
2 min read

வங்கிகளை தனியார்மயமாக்கு வது, துணை வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். காசோலைகள் தேங்கியதால் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான மைசூர் ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 5 வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கவும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் 80 ஆயிரம் வங்கிகளில் பணிகள் முடங்கின. 26 லட்சம் காசோலைகள் தேங்கியதால் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 60 ஆயிரம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இல்லாமல் அனைத்து பொதுத்துறை வங்கிகள், பெரும்பாலான தனியார் வங்கிகள் வெறிச்சோடின. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிவர்த்தனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது.

வேலை நிறுத்தத்தையொட்டி, பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் பேசியதாவது:

மத்திய அரசின் பொதுத்துறை வங்கி விரோதக் கொள்கைகளை கண்டித்து, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்கிறோம். நாட்டில் பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்னும் 30 கோடி மக்களுக்கு வங்கியில் கணக்கு இல்லை.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்தாமல், சீர்திருத்தம் என்ற பெயரில் மக்கள் விரோதக் கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கிறது. ரூ.111 லட்சம் கோடிக்கு மக்கள் சேமிப்பு உள்ள வங்கியை தனியாருக்கு கொடுக்க மத்திய அரசு முடிவெடுக்கிறது.

மக்கள் சேமிப்பை வைத்து, பொதுத்துறை வங்கிகள் பல்வேறு துறைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகின்றன. வங்கிகள் தனியார் மயமானால், அவை லாப நோக்கில் மட்டுமே செயல்படும். மக்கள் நலன் சார்ந்த குறைந்த வட்டி கடன்கள் ரத்து செய்யப்படும்.

இந்திய வங்கிகளில் ரூ.13 லட்சம் கோடி வராக் கடன்கள் உள்ளன. இதை மத்திய அரசு வசூலிக்காமல், முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

மக்களின் சேமிப்பு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றுதான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே, மக்களும் எங்களுடன் இணைந்து போராடி, மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும்.

இன்றைய வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிவர்த்தனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன. எங்கள் கோரிக்கையை ஏற்று, பொதுத்துறை வங்கிகளை பலப் படுத்த வேண்டும். இல்லாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in