

சூரிய மின் சக்தியை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் வாங்குவது குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தால், மின் தொகுப்புடன் கூடிய சூரிய சக்தி திட்டங்கள் அதிகரிக்கும் என்று, சூரியசக்தி தொழிற்துறையினர் கூறியுள்ளனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த கண்காட்சி, ஜூன் 12 முதல் மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. இதில், உலகம் முழுவதுமுள்ள 250க்கும் மேற்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் தரவுள்ளன.
இந்நிலையில், இந்தக் கண்காட்சிக்கான முன்னேற்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் புதன் கிழமை நடந்தது. தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) மற்றும் யூ.பி.எம்., நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில், 50க்கும் மேற்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிற்துறையினர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
சென்னை சன் எடிசன் நிறுவன மேலாண் இயக்குனர் பசுபதி கோபாலன் தி இந்துவிடம் கூறுகையில் “சூரிய சக்தி நீண்டகால மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்துக்கான உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மொத்த மின் உற்பத்தியில் ஆறு சதவீதம் அளவுக்கும் சூரியமின் சக்தியை கட்டாயம் வாங்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தால், இன்னும் அதிக அளவில் சூரியசக்தியில் முதலீடுகள் இருக்கும். விவசாயத்துறையில் சூரியசக்தி பம்பு செட்டுகள் அமைக்கவும், அரசு ஊக்கப்படுத்த வேண்டும்,’ என்றார்.