93-வது பிறந்த நாளையொட்டி பெரியார், அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி நாளை மரியாதை: அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்

93-வது பிறந்த நாளையொட்டி பெரியார், அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி நாளை மரியாதை: அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதி, தனது 93-வது பிறந்த நாளையொட்டி பெரியார், அண்ணா நினைவிடங்களில் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

கருணாநிதியின் 93-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட திமுவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், உதவிப் பொருள்கள் வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிறந்த நாளின்போது அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு தொண்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெறுவது கருணாநிதியின் வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நாளை காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திமுக முன்னணி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வரும் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மாலை 5 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடக்கும் தனது 93-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கிறார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in