

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென கிலோ ரூ.25 ஆக குறைந்துள்ளது.
கடந்த வாரம் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.80-க்கும், சில்லறை கடைகளில் ரூ.100-க்கும் விற்கப்பட்டு வந்த தக்காளி விலை, கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வருகிறது. நேற்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென சரிந்து, கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்டது. ஜாம்பஜார் சில்லறை மார்க்கெட்டில் கிலோ ரூ.30-க்கும், பண்ணைப் பசுமை கடைகளில் ரூ.34-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாக ராஜனிடம் கேட்டபோது, ‘‘கடந்த வாரம் 32 லோடு மட்டுமே தக்காளி வந்தது. அதனால் ரூ.80 வரை விற்கப்பட்டது. தற்போது தக்காளி லோடு வரத்து படிப்படியாக உயர்ந்து, நேற்று 58 லோடுகள் வந்தன. அதனால் நேற்று முன்தினம் ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி, நேற்று வரத்து மேலும் அதிகரித்ததால், திடீரென ரூ.10 குறைந்து, ரூ.25-க்கு விற்கப்பட்டது’’ என்றார்.