

சென்னை மணலி பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஐ.ஒ.டி.எல் சமையல் காஸ் சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் மணலி எரிவாயு நிரப்பும் ஐ.ஒ.டி.எல் நிர்வாகத்தில் சிலிண்டர்கள் ஏற்றி, இறக்குவது மற்றும் லாரிகள் மூலம் சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் கொண்டு செல்லும் பணியை 130 ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக செய்து வந்தனர்.
இந்நிலையில் ஐஒசி நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பதில் இந்தப் பணியை முதற்கட்டமாக 50 விநியோகஸ்தர்களிடம் வழங்கியது. இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலியம் காஸ் ஊழியர்கள் சங்கம்(சி.ஐ.டியு.) மற்றும் திருவொற்றியூர் பொது தொழிலாளர் சங்கத்தினர் நிர்வாகத்துடன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஐ.ஒ.சி.தலைமை இயக்குநர் மேலாளர் கோபிநாத், திருவொற்றியூர் தாசில்தார், மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் விநியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டம் கைவிடப்பட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை ஒத்துக் கொள்ளப்படவில்லை.
இதனை அடுத்து ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் மாலை 3 மணியளவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் காஸ் ஊழியர்கள் சங்கம்(சி.ஐ.டியு.) பொதுச் செயலாளர் கே. விஜயன் கூறுகையில்:
“பல ஆண்டுகளாக பணி செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கே பழைய முறையில் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அத்திபட்டு, புதுவை, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய ஐஒசி சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சமையல் காஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளனர். இதனால் சிலிண்டர் நிரப்புவது, லாரிகள் மூலம் சிலிண்டர் கொண்டு வரும் பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.