Last Updated : 20 Jun, 2015 11:17 AM

 

Published : 20 Jun 2015 11:17 AM
Last Updated : 20 Jun 2015 11:17 AM

ஆங்கிலேயர் வெளியிட்ட அறிவிப்பு செப்பேடு: பாதுகாத்துவரும் பாவாலி கிராமத்தினர்

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட் டதைத் தொடர்ந்து வெடிபொருள், ஆயுதங்கள் வைத்திருப்பவர்களின் உயிர் பறிக்கப்படும் என்று ஆங்கிலேயர் வெளியிட்ட செப்பேடு, விருதுநகர் அருகே யுள்ள பாவாலி கிராமத்தில் இன்றும், அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் அருகே உள்ள சிறப்புமிக்க ஊர்களில் ஒன்று பாவாலி கிராமம். தலை கிராமம் என்று அழைக்கப்படும் பாவாலி, பல நூறு ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் கொண்டது. ஜமீன் கட்டுப்பாட்டில் பாவாலி இருந்தபோது, திருநெல்வேலி சீமையை ஆண்ட ஆங்கிலேய துரை மெசர்பானர்மேன் என்பவரின் அறிவிப்பு செப்பேடு ஒன்று கடந்த 21.10.1799-ல் பாவாலி கிராமத்தின் கல்தூண் ஒன்றில் பதிக்கப்பட்டது.

கட்டபொம்மனை தூக்கிலி ட்டதற்குப் பிறகு, யாரேனும் வெடி மருந்து, ஆயுதங்கள், பீரங்கிகள் போன்றவற்றை வைத்திருந்தால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தமிழில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்த செப்பேட்டில், இனிமேல் யாதொரு பாளையக்காரனும் வரி, வட்டி, கோட்டை, கொத்தலம் முடையங்கள் போட்டாலும் பீரங்கி, ரேக்குகள், கொடிமரங்கள் வைத்திருந்தாலும் கத்தி, ஈட்டி இவைகளை வைத்திருந்தாலும் அவர்கள் கும்பனி (ஆங்கிலேயர் நிறுவனம்) ஆதரவுகளை இழந்து, அவர்களின் பாளையப்பட்டுகளை கும்பனியார் தட்டிக்கொண்டு கும்பனியாருடைய எதிரி என்று தண்டிக்கப்படுவர்.

பாளைப்பட்டுக்களில் உள்ள சேவைக்காரர், சேவகர்கள், காவல்காரர்கள், குடியானவர்கள் யாவராயினும் கல்வெடி, திரிவெடி, ஈட்டி, வல்லையம், பிடி கத்தி, பிக்காஸ்கனைகள் போன்றவைகளை பதுக்கினாலும், வைத்திருந்தாலும் அந்த பாளையக் காரர்களே தண்டிக்கப்படுவர். இவர்கள் யார் தவறு செய்தாலும் பாளையக்காரர்களே பொறுப்பு என்று உத்தரவாதம் செய்ய வேண்டும்.

இதைமீறி, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கண்டால் பிடிபட்டவர்களின் உயிர்சேதம் செய்யப்படும். அந்த பாளையப்பட்டுகள் தட்டப்படும், என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது:

பாவாலி கிராமத்தில் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டம் எட்டை யபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கொள்ள ப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்று ஆங்கிலேயரின் செப்புத் தகடுகள் இருந்ததாகவும், உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் காலப்போக்கில் அவை சிதைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

பாவாலி கிராமத்திலும் பல ஆண்டுகள் பரமரிப்பின்றிக் கிடந்த செப்புத் தகட்டை கிராமத்தினர், தற்போது மீட்டுருவாக்கம் செய்து சுற்றுச் சுவருடன் மேடை அமைத்து அதில் செப்பேடு பதிக்கப்பட்ட கல்தூணை நட்டு வைத்துள்ளனர். மேலும், செப்பேட்டில் உள்ள தமிழ் எழுத்துகள் சற்று படிப்பதற்கு கடினமாக இருப்பதால், அதை புரியும்படி கல்வெட்டில் செதுக்கி, அருகில் உள்ள சுவரில் பதித்து வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இதுகுறித்து, பாவாலி கிராமத்தினர் கூறும்போது, எங்கள் ஊரில் மட்டுமில்லை, இதுபோன்ற அரிய பல விஷயங்கள் பல ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் கண்டிப்பாக ஒரு சிறப்பு இருக்கும்.

மறைக்கப்பட்ட அல்லது புதைந்து கிடைக்கும் சிறப்புகளை வெளிக்கொண்டு வர ஊரில் உள்ள பெரியவர்களுடன் இணைந்து இளைஞர்கள் செயல்பட வேண்டும். எங்கள் ஊரின் சிறப்பை நாங்கள் பாதுகாத்து வருவதைப் போல, ஒவ்வொருவரும் தங்கள் ஊரின் சிறப்புக்களை காக்க முன்வந்து செயலாற்ற வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x