ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: திருமாவளவன், முத்தரசன் கூட்டறிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: திருமாவளவன், முத்தரசன் கூட்டறிக்கை
Updated on
2 min read

ஆர்.கே.நகர் தொகுதியில் எமது இருகட்சிகளும் போட்டியிடப்போவதில்லை, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் தெரிவித்தனர்.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்வதற்காக, கடந்த மார்ச் 11,13,16 மற்றும் 17 ஆகிய நாட்களில், மூன்று கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் கூடி கலந்தாய்வு செய்தோம். தற்போது, அகில இந்திய அளவில் நிலவும் அரசியல் சூழல்களையும் கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் இந்த இடைத்தேர்தலிலும் நமது முடிவு அமைய வேண்டும் என்கிற அடிப்படையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். குறிப்பாக, உ.பி மாநிலம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், ஜனநாயகச் சக்திகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதையும் உரையாடலில் முன்வைத்தோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்ற கருத்தை முன்வைத்தது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, போட்டியிடுவதைத் தவிர்க்கலாம் என்றும், மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு ஏற்ற வகையில் இப்போதே நாம் மூவரும் ஒருங்கிணைந்து ஒரு முடிவை எடுக்கலாம் என்று வலியுறுத்தியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நலக் கூட்டியிக்கத்தின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இடதுசாரிகள் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அது எந்த முடிவாக இருந்தாலும் அதற்கு உடன்படுவதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதில்லை என்பதில் உறுதியாக நின்றது. அதனையடுத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூடி, கலந்தாய்வு செய்து மாற்று ஆலோசனையை முன்வைத்தது. அதாவது, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியது. இந்தக் கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கருத்துக்கும் உடன்படவில்லை.

மக்கள் நலக் கூட்டியக்கம் ஒற்றுமையுடன் தமது பயணத்தைத் தொடர வேண்டும் என்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்தில் முன்வைத்த தனது நிலைப்பாட்டில் ஒரு தளர்வை ஏற்படுத்தி கொண்டு, மாற்று ஆலோசனையை முன்வைத்தது இதற்கு விசிக ஆதரவு தெரிவித்த நிலையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, போட்டியிடுவது என்று முடிவு செய்து, வேட்பாளரையும் அறிவித்துள்ளது.

இந்த முடிவை எடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முழு உரிமையும் முழு சுதந்திரமும் உண்டு. எனவே எமக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. அதே வேலையில், எமது இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதுமில்லை, யாரையும் ஆதரிப்பதுமில்லை என்பதே எமது நிலைபாடாகும்.

தற்போது, இந்திய அளவில் மதவாத சக்திகள் விரிந்து பரந்து தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் தீவிரமாக உள்ளது என்பதில் இடதுசாரி, ஜனநாயகச் சக்திகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டுமென்பதை இந்த சூழலில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குறிப்பாக, தமிழகத்திலும் மதவாத, சாதியவாத சக்திகள் வேரூன்றுவதற்குக் குறிவைத்து வேலைகள் செய்து வருகின்றன. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் தேவையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in