

தூத்துக்குடியில் கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்த துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 3 பேர் 5 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறியதாவது:
‘தூத்துக்குடி அருகேயுள்ள கோக்கூர் மேற்கு பகுதியை சேர்ந்த வர் ராமச்சந்திரன். ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட் சியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி(43). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த ஜனவரி 9-ம் தேதி விஜய லட்சுமி தனது வீட்டு முற்றத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தூத்துக்குடி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி கால்டுவெல் காலனி 2-வது தெருவை சேர்ந்த முருகேசன் என்ற முருகேச பாண்டியன் (53), மதுரை விரகனூரை சேர்ந்த கனகபாண்டியன் (24) ஆகியோர், நேற்றுமுன்தினம் தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு கவுன்சிலர் முருகன் முன்னிலையில் சரணடைந்தனர்.
இருவரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், துணை வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஏற்பாட் டில், அவரது மனைவி விஜயலட் சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. முருகேச பாண்டியன், கனக பாண்டியன் மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பை சேர்ந்த புகழ்ராஜ் (23) ஆகியோர், விஜய லட்சுமியை கொலை செய்து, அவரது கழுத்தில் கிடந்த 20 கிராம் நகையை எடுத்துச் சென்றுள்ளனர்.
பெண் தொடர்பு
ராமச்சந்திரனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள் ளது. இதனை விஜயலெட்சுமி கண்டித்ததால் கூலிப்படை மூலம் அவரை கொலை செய்துள்ளார். இக்கொலையைச் செய்ய முருகேச பாண்டியனுக்கு, ரூ.1 லட்சம் கொடுக்க சம்மதித்து ரூ.50 ஆயிரம் மட்டுமே துணை வட்டாட்சியர் ராமச்சந்திரன் கொடுத்துள்ளார். மீதி பணத்தை இன்னும் கொடுக்க வில்லை.
துணை வட்டாட்சியர் ராமச்சந் திரன், முருகேச பாண்டியன், கனக பாண்டியன் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் திருடப்பட்ட 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய புகழ்ராஜ் ஏற்கெனவே கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்’ என்றார் எஸ்.பி.