Published : 10 Jan 2017 11:57 AM
Last Updated : 10 Jan 2017 11:57 AM

பொங்கல் விடுமுறை ரத்து சர்ச்சைக்கு அன்புமணி விளக்கம்: கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு ரத்து செய்துவிட்டதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துள்ளார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்தது போலவும், நடப்பாண்டில் அது கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது போலவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

அதன் அடிப்படையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறியுள்ள திமுக, மத்திய அரசைக் கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதிமுக தலைமையும் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது.

இந்த செய்திகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு விபரம் தெரிந்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை. விருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய தேசிய விடுமுறை நாட்களாகவும், 12 நாட்கள் விருப்ப விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுகின்றன. கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மற்றும் அனைத்து மத திருவிழாக்கள், முகரம் ஆகியவை தவிர தமிழகத்தில் கொண்டாடப்படும் தீபாவளி இடம் பெற்றுள்ளது. விருப்ப விடுமுறை நாட்களில் 10-வது இடத்தில் பொங்கல் திருநாள் இடம் பெற்றிருக்கிறது. இதே நடைமுறை தான் பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால், தவறுதலாக யாரோ பரப்பிய தகவலை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள் கண்டனம் மற்றும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதும் நடந்திருப்பதாக கருதுகிறேன்.

அதேநேரத்தில் தேசிய இனமான தமிழர்களின் முதன்மைத் திருநாளான பொங்கல் திருநாளுக்கு கட்டாய தேசிய விடுமுறை நாளில் இடம் பெறுவதற்கான அனைத்து சிறப்புகளும், தகுதிகளும் உள்ளன. அவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் திருநாள் கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஏனோ அவ்வாறு செய்யப்படவில்லை. இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம் பெற்றுள்ள நிலையில், பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை டெல்லியில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x