

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அக்கட்சியினர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிப் பதற்காக கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுகவினர் கடும் அமளியில் ஈடு பட்டனர். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க் கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து அனைத்து மாவட்டங் களிலும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் 4 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், பீட்டர் அல்போன்ஸ், ஆ.கோபண்ணா, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் மா.சுப் பிரமணியன், ஸ்டாலினின் மகன் உதயநிதி, வாகை சந்திரசேகர்., என்.ஆர்.தனபாலன், தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சேகர்பாபு, ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன், ஜவாஹிருல்லா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
திருச்சியில் மு.க.ஸ்டாலின்
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
2016 சட்டப்பேரவைத் தேர்த லில், ஜெயலலிதா முதல்வர் வர வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தனர். பினாமி முதல் வராக வர வேண்டும் என்று அல்ல. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை முறையாக விசாரணை நடத்தினால், பெங்களூரு சிறையில் ஆயுள் கைதியாக இருக்க வேண்டும்.இந்த ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும்.
சட்டப்பேரவை யில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக 23-ம் தேதி (இன்று) குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். அப்போது, சட்டப்பேரவையின் அன்றைய செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோருவோம்.
தமிழகம் ஏற்கெனவே கடன் சுமையில் உள்ள நிலையில் எப்படி ஸ்கூட்டி மானியம் தருவார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைப் போலவே எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகளும் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கும் என்றார்.
இந்த உண்ணாவிரதத்தில், இந் திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், கே.என்.நேரு, திருச்சி சிவா உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.
வருத்தம் தெரிவித்த ஸ்டாலின்
சசிகலா தரப்பினரை விமர்சிக்கும்போது இனி மன்னார்குடி என்ற வார்த்தையை திமுக பயன்படுத்தாது என்றும், இதுவரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். இனி மாபியா கும்பல் என்றுதான் வரும் என்றும், அதை சபதமாகவே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
'நம்பிக்கை வாக்கெடுப்பு வாசகங்கள் தவறு'
காஞ்சிபுரத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி இல்லாமல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்களை சிறை வைத்து ஓட்டு வாங்கி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்கியதற்கு சமமானது. அந்த நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் வாசகங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் நம்பிக்கை வாக்கு கோருவதுபோல் இல்லாமல் உத்தரவிடுவதுபோல் இருந்தன. அந்த வாசகங்களே தவறானது.