

தருமபுரி அருகே 60 ஆண்டுகளாக திருவிழா நடக்காமல் உள்ள கோயிலில் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ளது கோணாங்கிஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஏறுபள்ளி கிராமத்தில் உள்ளது மிகப் பழமையான சாமுண்டீஸ்வரி கோயில். சாதிய விவகாரங்களால் இந்தக் கோயிலில் கடந்த 60 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படாமல் உள்ளது.
ஏறுபள்ளி, கோணாங்கி அள்ளி, பி.அக்ரஹாரம், தின்னப்பட்டி, அரிசந்திரனூர், புதூர், சிக்கனம்பட்டி, போளேகவுண்டனூர், காளேகவுண்டனூர், பண்ணையன அள்ளி, முருகனந்தபுரம், எச்சன அள்ளி ஆகிய 12 ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோயிலில் ஆவணி மாத இறுதியில் தொடங்கி புரட்டாசி மாத முதல் வாரத்தில் முடியும் வகையில் சுமார் 15 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக மைசூரு தசரா திருவிழா நேரத்தில் இந்த விழா நடத்தப்படும்.
விழாவின்போது மாவிளக்கு ஊர்வலம், பொங்கல், எருதாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் விமரிசையாக நடத்தப்படும். இந்நிலையில் சாதிய விவகாரத்தால் அந்தக் கோயில் திருவிழா நீண்ட காலமாக நடத்தப்படுவதில்லை.
இதுபற்றி கோயிலுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த முதியவர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியது:
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழாவின்போது மாவிளக்கு ஊர்வலத்தில் ஒரு சமூகத்தவருக்கு சில உரிமைகள் மறுக்கப்பட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே உரசல் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிப்புடன் திருவிழாவை நடத்த முயன்றனர். மேலும், ஊர்வலமாக வரும் சாமிக்கு குடை பிடித்து வருவது தொடர்பாகவும் பிரச்சினை எழுந்து மோதல் சூழல் ஏற்பட்டு அதிலிருந்தே திருவிழா நிறுத்தப்பட்டு விட்டது.
இது நடக்கும்போது நாங்கள் விபரம் அறியாத சிறுவர்கள். எங்கள் வீட்டு பெரியவர்கள் கூறிய தகவலின் அடிப்படையிலேயே இதெல்லாம் எங்களுக்குத் தெரியும். இப்போதும் இந்தக் கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவது, விசேஷ நாட்களில் பூஜை செய்து வழிபடுவது, திருமணம், காதுகுத்து, கிடா விருந்து என அனைத்தும் நடைபெறுகிறது. இதெல்லாம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்கின்றனர். ஆனால், திருவிழா மட்டும் நடத்தப்படவில்லை.
இதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் அதை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு சமூகத்தினரிடையே தேவையற்ற மோதல் ஏற்பட்டு விடுமோ என்று இந்த விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த கோயிலில் மீண்டும் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.