என் பிறந்த நாளைக் கொண்டாடாதீர்: கனிமொழி வேண்டுகோள்

என் பிறந்த நாளைக் கொண்டாடாதீர்: கனிமொழி வேண்டுகோள்
Updated on
1 min read

திமுக உடன்பிறப்புகள் பிறந்த நாள் குறித்து சுவரொட்டிகளோ, வாழ்த்து விளம்பரங்களோ செய்ய வேண்டாம் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வடகிழக்குப் பருவமழையில் 62 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்க விதிகளில் இடம் உள்ளது.

நான் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலும், ஊடக செய்திகளின் அடிப்படையிலும் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்டதாக அறிகிறேன். நேற்று காலை கூட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இம்மாவட்டத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 33.

விவசாயிகளின் தலையில் இரட்டை இடி இறங்கியுள்ளது. ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை ஒருபுறம், விதைக்கும் காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் மறுபுறம். பல விவசாயிகள் கடன் பெற முடியாமலும், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்க முடியாமலும், கூலிக்கு ஆட்களை நியமிக்க முடியாமலும் கடும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அடிப்படை பயிர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. இவை ஒருபுறம் என்றால், கடுமையான வறட்சி மீதமிருந்த பயிர்களையும் அழித்து விட்டது.

இந்த துயரமான சூழலில் விவசாயிகளின் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஜனவரி 5-ம் தேதி எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்.

எனவே, என்னை வாழ்த்தி சுவரொட்டிகளோ, விளம்பரங்களோ வேண்டாம் என்று கழக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன்.

சில இடங்களில் என்னை வாழ்த்தும் சுவரொட்டிகளைப் பார்க்கிறேன். அவற்றைத் தவிர்க்குமாறு மீண்டும் வேண்டுகிறேன்'' என்று கனிமொழி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in