

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களைக் கண்டித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சென்னையில் நேற்று நகல் எரிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறக்கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளாக நேற்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெளியே இந்த சட்டத் திருத்தம் தொடர்பான நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், அதன்பிறகு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளர் எஸ்.அறிவழகன், துணைத் தலைவர் கினிஇமானுவேல் மற்றும் பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நளினி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், காங்கிரஸ் மூத்த நிர்வாகி கோபண்ணா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கறிஞர் ரஜினிகாந்த், தோழர் தியாகு உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.
இதுதொடர்பாக பார் கவுன்சில் உறுப்பினர்கள் வரதன், கார்த்திகேயன், சந்திரமோகன் ஆகியோர் தலைமைப் பதிவாளர் டி.ரவீந்திரனை சந்தித்து முறையிட்டனர். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் வரும் 15-ம் தேதி தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலின் வீட்டின் முன்பாக உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.