

திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் மகளிருக்கான 50 சதவீத வார்டுகளை பிரித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மாநில நகராட்சி நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகராட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட் சியாக அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து நகரை சுற்றியுள்ள 10 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு தற்போதுள்ள 48 வார்டுகளுடன் கூடுதலாக வார்டுகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கான உத்தரவு இதுவரை வரவில்லை என்பதால் கடந்த முறை நகராட்சிக்கு நடந்தது போலவே இந்தமுறையும் 48 வார்டுகளில் மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எல்லைகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிமுடிவடைந்து வரைபடமும் தயாரிக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலைகொண்டு 48 வார்டுகளுக்கும் தனித்தனியாக வாக்காளர்பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிவடைந்துள்ளது. இந்த முறை தேர்தலில் 50 சதவீத மகளிருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதால்
அதற்கான வார்டுகள் ஒதுக்கும் பணியும் நிறைவடைந்தது. இதை யடுத்து உத்தேச பட்டி யலை மாநில நகராட்சி நிர்வா கங்களின் ஆணையரின் ஒப்பு தலுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ளது.
மகளிருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள வார்டுகள் விபரம்: 1,3,5,9,10, 13,17,18,21,22,23, 24,25,28,29,34,35,37,42,43,48. மகளிர்(எஸ்.சி.): 27,44, எஸ்.சி (பொது): 11,26 பொது வார்டுகள்: 2,4,6,7,8,12,14,15,16,19,20,30, 31, 32,33,36,38,39,40,41,45,46,47. என்ற அடிப்படையில் வார்டுகளை பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பின் அரசிதழில் (கெஜட்) வார்டுகள் இடஒதுக்கீடு விபரம் குறித்து வெளியாகும்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வார்டு வாரியாக வாக்காளர்பட்டியல் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மகளிர் அதிக சதவீதம் உள்ள வார்டுகள் கண்டறியப்பட்டு 50 சதவீத வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் எந்தெந்த வார்டு மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் மாநில நகராட்சிகளின் நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஏதும் மாற்றம் செய்யவேண்டும் என்றால் தெரிவிப்பர். இதன்பின் இடஒதுக்கீடு விபரம் அரசிதழில் வெளியிடப்படும். அனுப்பியுள்ள பட்டியலில் மாற்றம் இருக்கவாய்ப்பில்லை, என்றார்.